Thursday, January 21, 2010

தொலைந்து போன வார்த்தைகள் ...

மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை காலையில் எந்திருக்க முடியாமல் மீண்டும் மீண்டும் மெத்தையில் புரண்டு கொண்டிருந்தேன். தலை கனத்துப்போய் இருந்தது.முந்தினம் அடித்த எம்.ஜி.எம். வோட்காவினால் தான். உடல் நலக்குறைவால் அறையில் படுத்திருந்த என் அப்பா என்னை பல முறை அழைத்ததாக என் அம்மா கூறியவாறே என்னை எழுப்பினாள்.”ஏதோ பேசனுமாம், என்னன்னு போய் கேளுடா” என்றவாரே மாத்திரைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள். ”அப்புறம் பேசுறேன் மா” என்று கூறிவிட்டு தலையணைக்குள் புதைந்து கொண்டேன். அலுவலக நண்பனிடம் இருந்து கைப்பேசி ஒலித்தது.மீண்டும் வோட்கா குடிக்க அழைத்தான்.காலை எட்டு மணிக்கெல்லாம் முன் இரவில் எடுத்துவைக்கப்பட்ட வோட்காவை குடித்து விட்டு அலுவலகம் செல்லும் காலம் அது. என் கைக்கடிகாரம் பலன் இல்லாமல் போய் வெகு நாட்கள் ஆகியிருக்கும். 24 நேரமும் குடித்துக் கொண்டே இருப்போம். ”நம்மலாம் குடிகாரபயலுக டா ,சின்ன பையன் மாதிரி வீட்ல படுத்து தூங்காதடா” என்ற வார்த்தைகள் என்னை பல்விளக்க கூட அனுமதிக்கவில்லை. வோட்காவிலேயே பல் விளக்கி கொள்ளலாம் என்று கிளம்பினேன். வீட்டுக்கதவை திறந்து வெளியே வரும் பொழுது என்னை அழைத்த அப்பாவிற்கு ”இந்தா வந்திடுறேன் பா” என்று மட்டுமே பதில் அளித்து விட்டு கிளம்பினேன்.

பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் எனக்கு மதியம் ஆனதை உணர்த்தினார்கள்.வண்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்கில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் 4 ரூபாய் கொடுத்து கிங்ஸ் சிகரெட்டை வாங்கி பத்த வைத்து விட்டு மீண்டும் கிளம்பினேன்.அடுத்த வாரம் அப்பாவிற்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.அரை மணி நேரத்தில் ஈ.சி.ஆர் கடற்கரையில் உள்ள பெப்பில்ஸ் இடத்தை அடைந்தேன்.எப்போதும் போல் காரின் பின்புறம் வோட்கா பாட்டிலை வைத்துக்கொண்டு புகை விட்டுக்கொண்டிருந்தார்கள். “என்ன மச்சான் இவ்ளோ லேட்டு, சரக்க காக்க வைக்க கூடாது டா” என்று கூறிக்கொண்டு பாட்டிலை என் கையில் கொடுத்தார்கள். வோட்காவில் வாய் கொப்பளித்துவிட்டு கிளாஸில் ஸ்ப்ரைட்டுடன் கலந்து ஊற்றினேன். இரண்டு ரவுண்ட் போயிருக்கும்,போலீஸ் ஜீப் வந்தது.ஒரு ஏட்டையாவும் இரண்டு போலீஸ்காரர்களும் வந்தார்கள். ” ங்கோத்தா, வந்துட்டாய்ங்க டா , தே.... பசங்க ஞாயிற்றுகிழம கூட நிம்மதியா குடிக்க விட மாட்டேங்குறாய்ங்க” என்று ஒருவன் கூறியதற்கு இன்னொருவன் “ஞாயிற்றுகிழம மட்டும் தான் குடிக்குற மாதிரி பேசுற, எல்லா நாளும் தானே டா பாடு குடிக்குற என்றான். எப்போதும் போல் ஒரு குவாட்டரை ஏட்டையாவுக்கு நாங்களே மரியாதையாக கொண்டு போய் குடுத்து விட்டு வந்தோம்.சிறிது நேரம் கழித்து அவரே சைட் ஸ்னாக்ஸ்களையும் வாங்கிவிட்டு சென்றார். ”என்ன மச்சான், எப்ப பாத்தாலும் தனியாவே வர,எதாவது ஃபிகர கிகர செஞ்சோமா, அப்படியே எங்கட்டயும் லைன்ல விட்டோமானுலாம் கிடையாது...” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே என் கைப்பேசி ஒலித்தது.வோட்காவை குடித்து கொண்டே பேசினேன்.எதிர்முனையில் என் அம்மா.எங்கடா இருக்க, அப்பா என்னவோ மாதிரி இருக்காருட, சீக்கிரம் வாடா என்று பதற்றத்துடன் கூறினாள். ”இந்தா வந்துட்டேன் மா” என்று கூறிவிட்டு என் கையில் இருந்த கிளாசை முடித்து விட்டு உடனே கிளம்பினேன்.

வரும் வழியில் எத்தன பேரிடம் வாங்கிய சாபமோ வீட்டு வாசலுக்கு வந்தவுடன் டயர் பஞ்சர். உள்ளே அவசரமாக சென்றேன். அமைதியாக படுக்கையிலேயே இருந்தார். ”அப்பா அப்பா” என்று அழைத்தேன். என்னை பார்த்துவிட்டு ”உலகத்துல காத்தே இல்லடா, ரொம்ப அமைதியா இருக்கு” என்றார். ”ஏன் தல சீவல” என்றார். கையால் முடியை வாரிக்கொண்டேன். என் அம்மாவை பக்கத்தில் அழைத்து கையை பிடித்துக் கொண்டார். ”வீட்டு கதவு மூடிருக்கா?“ என்றார்.”போய் மூடிட்டு வா” என்றார். கதவை மூடிவிட்டு வரும் போது என் அம்மாவிடம் ”காம்ப்ளான் சூட குடுமா” என்றார்.என்னை அருகில் கூப்பிட்டு ”உண்ட்ட சொல்லிட்டனா” என்றார். என்னதுப்பா? என்றேன். அமைதியாக இருந்தார். என்னதுப்பா? என்றேன். மீண்டும் அமைதியாக இருந்தார். டாக்டர்ட்ட போவோமா என்றேன். பதில் ஏதும் கூறாமல் என்னையே பார்த்துக்கொண்டு ”உண்ட்ட.......என்று கூறும் போது நான் போய் டாக்ட்டர கூட்டிட்டு வரேன் என்று எழுந்து பக்கத்தில் இருந்த சரஸ்வதி நர்ஸிங் ஹோம் சென்றேன்.நர்ஸ் மட்டும் வந்தார்கள். அவர்களை ஆட்டோவில் அழைத்து வீட்டுக்கு வந்தேன்.வீட்டிற்குள் வந்தவுடன் என் அம்மா ”என்ன சத்தி ஆச்சு,சத்தி எங்க? சத்தி எங்கனு கேட்டுட்டே அமைதியா இருக்கா” என்று அழுதுகொண்டே கூறினாள். பக்கத்தில் வந்து ”அப்பா” என்றேன். நர்ஸ் எல்லாம் அட்ங்கிட்டு இருக்கு என்று சாதாரணமாக சொன்னாள். ஹாஸ்பிட்டல் எடுத்துட்டு போவோம் என்றேன். ”வேலைக்காவாதுப்பா“ என்று மீண்டும் சாதாரணமாக சொன்னாள். மூச்சு தொண்டையில் அடங்கி கொண்டிருந்தது.பெற்று வளர்த்த பெருமான் சுடுகாடு செல்லும் நேரம் வந்ததை உணர்ந்தேன். கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை. அப்பாவின் கை கால்கள் குளிர்ந்து இருந்தது. எதுவும் அற்றவனாய் உணர்ந்தேன்.

என்னை தொட்ட அந்த கைகள் மீண்டும் தொட்டு விடாதா, ஒரே ஒரு தடவை என்னை பேர் சொல்லி கூப்பிட்டு விட மாட்டாரா , அந்த சிரிப்பை ஒரு முறை பார்த்து விட மாட்டேனா, என் அம்மாவை ஒருமுறை கூப்பிடுவதை பார்த்துவிட மாட்டேனா,அந்த காம்ப்ளானை குடித்து விட மாட்டாரா என்று இப்படி எல்லாத்துக்கும் என் மனம் ஏங்கியது. கண்ணீர் பெருகியது. என் அம்மா என்னை பார்த்துவிடக்கூடாது என்று எண்ணி முகத்தை மறைத்துக் கொண்டே அழுதேன். ஏதோ சொல்லனும்னு காலையில இருந்து சொல்லிக்கிட்டு இருந்தையே, சொல்லீருப்பா..என்று அவசர அவசரமாக என் அப்பாவிடம் கூறினேன். எந்த அசைவும் இல்லை...மெது மெதுவாக அடங்கிக்கொண்டிருந்தார். ”மணி,மணி” என்று பாட்டி என் அப்பாவை கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். மூச்சு பிரிவதை எனக்கு பார்க்கும் அளவிற்கு சக்தியில்லை என்று உண்ர்ந்தேன். ஒரே ஒரு முறை என் அப்பா மூச்சு விடும் போது ஏற்படும் அசைவை உற்று பார்த்தேன். உயிரோடு இருக்கும் என் அப்பாவை பார்த்தாவாரே கண்களை அப்படியே மூடிக்கொண்டேன். உயிர் இல்லாத என் அப்பாவின் உடலை பார்த்து தான் ஆக வேண்டும் என்பது கூட அந்த சமயத்தில் எனக்கு தோன்றவில்லை. வீட்டை விட்டு வெளியே ஒடினேன்.வாசலில் ஓடிப்போய் நின்று கொண்டு கதவை சாத்தினேன்.காத்து கூட வெளியே வராத அளவிற்கு கதவை அழுத்தி சாத்தினேன். என்னிடம் என்ன சொல்ல வந்தார் என்பதை நினைக்க நினைக்க உடல் முழுதும் வெறிபிடித்து பின் அழுகையிடம் தோற்றது. என் அப்பா பட்ட கஷ்டங்கள் என்னை பல முறை “ அய்யோ, அய்யோ” என்று கம்மிய குரலில் சொல்ல வைத்தது. கத்த வேண்டும் போல் இருந்தது. மாடிப்படி அருகே இருந்த ஓஸ் பைப்பின் துவாரத்தில் என் வாயை வைத்து முடிந்த அளவு கத்தினேன். பின் நிகழ்வுகளை நினைத்து என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன். கதவு லேசாக திறந்தது. அப்பா தாத்தாவிடம் சென்றுவிட்டார் என்று நினைத்தேன். இதற்கு மேலேயும் என்னால் வெளியே நிற்க முடியவில்ல .உள்ளே செல்வதற்கு கதவை திறக்கும் போது என் அம்மாவின் குரல் காட்டிக்கொடுத்தது. அப்பா அமைதியாக படுத்திருந்தார்.

நான் கோழையாகிப் போன அந்த தருணங்களில் என் அப்பாவிடம் இருந்து எனக்கான அந்த தொலைந்து போன வார்த்தைகள் அந்த சாத்தி வைத்த கதவின் வழியே தைரியமாக இரு மகனே என்பதை மட்டும் உணர்த்தின என்று நம்பினேன்.அந்த தொலைந்து போன வார்த்தைகள் இன்று வரை தொலைந்தோ மறைந்தோ தான் இருக்கின்றது.

Monday, January 4, 2010

சிவப்பு .. மஞ்சள் .. பச்சை.. ...


கடலுக்குள் சென்றிருக்கிறேன். நடுக்கடலுக்கு சென்றதில்லை. உண்மையில் சொல்ல போனால் நடுக்கடல் எங்கு இருக்குறது என்றே தெரியாது.அலைகள் கரையை நோக்கியே சென்றுகொண்டிருந்தன. இரவு எட்டு மணி இருக்கும். நேரம் காலம் தெரியாமல் எதையோ சிந்தித்து கொண்டிருந்தேன். எல்லோரும் பரபரப்பாக தென்பட்டார்கள். கிறிஸ்துமஸ் முடிந்து ஆறு நாள் ஆகியும் பலபல என்று சேலைகள் மின்னிகொண்டுதான் இருந்தன. காலையில் வேலைக்கு செல்லும் போது இருக்கும் சோர்வு கலந்த பரபரப்புத்தன்மை அவர்களிடத்து இல்லை. எதையோ சாதித்து விட்டுத் தான் வீடு திரும்புவேன் என்று சபதம் போட்டது போல் சென்று கொண்டு இருந்தார்கள் என்று தான் எனக்கு தோன்றியது.

பெட்ரோல் பங் வாசலில் கியூ கட்டி நின்றனர். மறுபடியும் பெட்ரோல் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்தேன். பங்க் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்து கொண்டிருந்தனர். கார்கள் இரண்டு சக்கர வாகனங்களை விரட்டிக் கொண்டே இருந்தன. சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களை பல பேர் மறந்து இருப்பார்கள் போல சிக்னல் போஸ்ட் கம்பங்கள் அனாதையாக நின்று கொண்டிருந்தன என்னுடன் சேர்ந்து. சாலைகளும் மரங்களும் கைகுழந்தைகள் தூக்க சொல்லி அழுவது போல் சிணுங்கி கொண்டு இருந்தன. அவற்றை சாலை ஓரம் சோளக்கருது மசாலா கடலை வித்துகொண்டிருந்தவர்களும் செருப்பு தைக்கும் தொழிலாளிகளும் பஞ்சர் கடை வைத்திருப்பவர்களும் அரவணைத்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு புத்தாண்டையும் சூரியனுக்கு முன் வான வேடிக்கையுடன் கொண்டாடிவிடுகிறோம் என்ற கர்வத்துடன் மேலே இருப்பவன் எப்போதாவது தான் கீழே நோக்குவான் என்பதை போல் நிலா முழுமையாக தன் முகத்தை காட்டிக்கொண்டு தனக்காகத் தான் இத்தனையும் என்று நினைத்தவாறே
பிரகாசித்து கொண்டிருந்தான்.

இந்துக் கோயில்களும் கிறித்தவ கோயில்களும் பெரும்பாலான குடும்பங்களை வரவேற்று கொண்டிருந்தன. டாஸ்மாக் கோயில்களில் தான் மக்கள் அதிகம். கோழிகளும் மீன்களும் தங்கள் உயிரை தியாகம் செய்து கொண்டிருந்தன, அவைகளுக்கெல்லாம் புத்தாண்டு இருந்தால் நாம் தான் அவைகளின் கோயில்பலகாரங்கலாக இருப்போம் என்று தோன்றியது. மத போதகர்கள் எல்லாம் கூவத்தில் துவைத்து காய வைத்த கரை இருந்தும் தெரியாத வெள்ளை அங்கியை அணிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டிருந்தனர். கிருத்துவர்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு நாத்திகனை எதிர்த்து போர் நடத்திக்கொண்டிருந்தனர். இந்துக் கோயில்களும் பல சினிமா பாடல்களின் மெட்டுகளுக்கு கடவுள்களை நடனப் போட்டிக்கு பங்கேற்க செய்தனர். இவர்களுடன் மார்கழி மாதப் பணியும் சேர்ந்து கொண்டது. இளவட்டங்களின் போதைக்குரல்களும் பல விடுதிகளின் மின்சாரம் சேமிக்கும் திட்டமும் நட்சத்திரங்களுக்கு தெரியாமலும் தெருவிளக்குகளுக்கு தெரிந்தும் நடந்துகொண்டிருந்தன.

அந்த நொடியும் வந்தது. மழலை குரட்டைகளை களைத்த வண்ணம் புத்தாண்டு பிறந்தது. குழந்தைகள் தூக்க கலக்கத்தில் அழுது கொண்டிருந்தன. வானத்தில் புதிதாக நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. தற்காலிக நட்சத்திரத்தின் ஊடாக சூரியனை தோற்கடித்த கர்வத்துடன் சிரித்துகொண்டிருந்தான் நிலா. அண்ணா நகர் சிக்னலில் ஒரு பாட்டியின் கடையில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த வெடி சத்தங்களின் ஊடே வானத்தை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சிறுமி அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒவ்வொரிடத்தும் வந்து பசிக்குது அண்ணா எதவாது வாங்கி கொடுங்க அண்ணா என்று கூறினாள். அங்கு இருந்த சிலர் அந்த பாட்டி கடையில் வாழைபழம் கடலை மிட்டாய் வாங்கிகொடுத்தனர். அதை சாப்பிட்டுவிட்டு அங்குட்டும் இங்குட்டும் அலைந்தவள் மெதுவாக அந்த பாட்டியிடம் வந்து புத்தாண்டு வாழ்த்துகள் கூறினாள். நான் அவளையே பார்த்துகொண்டிருக்க அவள் அங்கு இருந்து இருட்டுக்குள் சென்றுவிட்டாள். நான் பத்து ரூபாய் கொடுத்து மூன்று சிகரெட் கேட்டேன். அந்த மூதாட்டி ஒரு டப்பாவுக்குள் இருந்து காது கேட்கும் மிசினை எடுத்து மாட்டினாள். நான் சிகரெட் வாங்கி பத்த வைத்து விட்டு வானத்தை நோக்கியவாறே புகையை சிரித்துக் கொண்டிருந்த நிலவை பார்த்து ஊதினேன். அந்த சிறுமி விட்டு சென்ற வாழ்த்துக்கள் என் புகையுடன் சேர்ந்து கொண்டு காற்றில் மறைந்து அநாதை ஆனது என்று மட்டும் தோன்றியது. மூன்று ரூபாய் சிகரெட்டுடன் சேர்த்து அந்த பாட்டி விரக்தியையும் விற்று விட்டால் என்று நினைத்தேன். கடல் அலைகள் கரையை தொட்டுவிட்டு உள்ளே சென்றிருக்கும் வினாடிகள் ஒன்றோ இரண்டோ மூன்றோ ....ஆனால் அதன் ஆர்பரிப்பு தொடக்கத்தில் இருந்து பார்த்தால் ஒவ்வொரு புத்தாண்டும பிறக்கும் அந்த தருணம் போன்றது தான்.