Monday, October 26, 2009

காடுகளில் வாழும் பலிஆடுகள்

இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு ஒரு மார்கழி பதினெட்டில் இந்த பூமிக்கு சுமையாய் கால் வைத்தேன் .அந்த தருணத்தில் இருந்து இந்த பூமி எனக்கு சுமையானது.என்னை அழவைப்பதற்கு செவிலிகளிடம் அன்றே போராட்டம். எனக்கு மகன் பிறந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுடன் இவ்வுலகத்திற்கு என் தந்தை வழங்கிய இனிப்புகள் என்னை சித்ரவதைகளுடனும்,உறவுகளுடனும் இந்த மாயை உலகத்துடனும் இணைத்தது. அந்த இனிப்பின் சுவைத்தன்மை மாறுவதற்கு முன்பே இந்த உலகம் தன்னுள் மறைத்து வைத்திருந்த அபாயங்களை அம்பலப்படுத்தியது. பிறந்த முதல் நாளே ஒரு செவிலி இந்த உலகம் தயாரித்த மருந்துகளுடன் என் உடலான மலத்தை இணைத்தாள். ஒவ்வொரு நொடியும் என் தந்தைக்கு புதிய போரட்டங்களை அவர் கண்முன் நிறுத்தியது. நான் இவ்வுலகில் கால் வைப்பதற்கு பணம், மருத்துவமணையை விட்டு வெளியே செல்ல பணம், இந்த சுற்றுச்சூழல் என்னுடன் இயங்கும் வரைக்கும் பணம். நிராயுதபாணியாக நின்ற என் தந்தைக்கு என் மழலை மட்டுமே அவரை போராளியாக மாற்றியுள்ளது. காலதேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத பணத்தை தேடி ஓடும் போராளி.

விரக்தியும் வேதனையும் மிஞ்சத்தொடங்கியது வாசலில். அக்னி பகவானுக்கும் வாரியலுக்கும் வேலை இல்லாமல் போனது. எனக்கு அழுவது மட்டுமே வேலையாகிப்போனது. போராளிகள் போராளிகளாகவே இருப்பதில்லை, அடிமைகளாகவும் மாற்றப்படுகின்றனர். ஊட்டச்சத்து அலுவலகத்தில் வேலை கிடைத்த்து. பள்ளி கொண்ட பெருமாள் எழுந்தருளி லக்ஷ்மி தேவியை அனுப்பி வைத்தார். பூலோகத்திற்கு நாங்கள் இருக்கும் இடத்திற்கு புதிதாக வருவதாள் ஒரு நாள் அவகாசம் வேண்டுமாயிருக்கும். முதல் நாள் வேலையை பற்றி நிறைய சொன்னாராம், என் அம்மா சொல்லக்கேள்வி. மறு நாள் காத்துக்கொண்டிருந்த நிகழ்வு தெரியாமல் இவ்வரசாங்கத்திற்காக உழைத்துப்போட சைக்கிளை மிதித்திறுக்கிறார். யக்ஞமூர்த்தியான நமது தமிழ் தாத்தாவின் சிபாரிசுக்கடித்ததை வைத்துக்கொண்டு ஒரு மலையாழ மேதை என் தந்தையின் வேலையை அபகரித்துக்கொண்டான்.

என் வீட்டிற்கு வழி தெரியாமல் லக்ஷ்மி தேவி கேரளம் வழியாக மீண்டும் பெருமாளை தூங்க வைக்க சென்றுவிட்டாள். சென்றவள் , தைரியமாக கடன் வாங்கலாம் என்ற நம்பிக்கையையும் உடைத்தெரிந்தாள். வீட்டில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. காய்கறி விற்பவர்கள், விலாசம் கேட்பவர்கள், அஞ்சல் துறையினர் அனைவரும் துக்கம் அனுஷ்டிப்பது போலவே தான் உணர்ந்தார்கள். அன்று என் தந்தை அடிமையாகி விடவில்லை என்பது யாரும் அறியாத உண்மையாகவே இருக்கிறது. வேலைஇல்லாமல் செய்தவை எல்லாம் வேலையாகவே மாறியது. கைக்கடிகாரங்களை பழுது பார்ப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார். கைகடிகாரங்கள் பிரசித்தி பெற்ற காலம் அவை. அவைகளை பழுது பார்த்து காலத்தை நகர்த்தினார். சிறுக சிறுக பணம் வீட்டினுள் நுழைந்தது. அடுப்பாங்கரையில் புலக்கம் அதிகமானது.என் தந்தையின் உறவுகள் ஒட்டத்தொடங்கின.எனக்கு முத்தங்கள் அதிகரித்தன.என்னை மையப்படுத்தி காமியதவத்தை மேற்கொண்டார். கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றை ஆரம்பித்து கல்லாவில் சிறிது காலம் உட்கார்ந்தார் நான் நடக்கத்தொடங்கும் வரை...........